உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளவனூர் பெருமாள் கோவிலில் 970 ஆண்டு பழமையான கல்வெட்டு

வளவனூர் பெருமாள் கோவிலில் 970 ஆண்டு பழமையான கல்வெட்டு

விழுப்புரம்: வளவனூர் பெருமாள் கோவிலில் 970 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.விழுப்புரம் அருகே வளவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பழமையான கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வளவனூர் பாவலர் பழனிச்சாமி, விழுப்புரம் வரலாற்று பண்பாட்டு மைய தலைவர் செங்குட்டுவன், சித்தார்த்தன் ஆகியோர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: வளவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவில் கருவறை பின் பக்க சுவற்றில், மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது.இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால், “இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னாடை ஜெயம் கொண்டு எனும் வாசகம் இடம் பெற்றுள்ளதாகவும், இது திங்களேர் திருதன் தொங்கல் என தொடங்கும், முதலாம் ராஜாதி ராஜனின் (கி.பி.1018-1054) மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியாகும். இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீ மாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியார்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு, சிவன் கோவிலுக்கு உரியதாக இருக்கலாம்” என்று ஆய்வாளர் விளக்கமளித்தார்.லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலின் கட்டுமான பணிகளின் போது, இந்த துண்டு கல்வெட்டு சுவற்றில் வைத்துபதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் குறித்த மேலதிக ஆய்வுகள் தேவையாகும்.நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு, தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேயமாக இப்பகுதி இருந்துள்ளதையும், 970 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.இந்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் ராஜாதிராஜன், சோழ பேரரசர் ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனும் ஆவார். மேலை சாளுக்கியருடன் நடந்த கொப்பத்து போரில் இம்மன்னர் உயிர் துறந்தார்.வளவனூரில் உள்ள ஜகந்நாத ஈஸ்வரர் கோவிலில், ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது, பெருமாள் கோவிலில் ராஜாதிராஜனின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் பெரியளவில் சிவாலயம் இருந்து, சிதைந்துள்ளதை அறிய முடிகிறது. வளவனூர் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டால், சோழர் கால தடயங்கள் மேலும் கிடைக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Giri V S
ஜன 25, 2025 16:40

சோழ சரித்திர பின்னணி உள்ள வளவனூர் ஐஓபியின் மேலாளராக நான் இருந்ததும் மேலும் என் மாமா ரங்கா ராவ் அந்த ஊர்ப் பள்ளியில் ஆசிரியராக இருந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.


Tetra
ஜன 24, 2025 20:51

என்னாது ? ப்ராமணர்களுக்கு கொடுக்கப்பட்டதாக? பெரியார் மண்ணிலா? இது ஆரியர்கள் புரட்டு என்று த்ராவிடம் எதிர்க்கும்


Saravanan Murugan
ஜன 21, 2025 22:03

மிக்க நன்றி சார் என்னுடைய ஊர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை