கார் மீது பைக், ஸ்கூட்டர் மோதி விபத்து பிளஸ் 2 மாணவர் பலி: 3 பேர் படுகாயம்
வானுார்: கிளியனுார் அருகே திடீரென பிரேக் பிடித்த கார் மீது, பைக், ஸ்கூட்டர் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர் இறந்தார். தாய், மகன், மகள் என 3 பேர் காயமடைந்தனர்.திண்டிவனம், உமர் ஷாகிப் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரஷித் மகன் அப்துல் ஆசிப், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவரான இவர், பொதுத்தேர்வு எழுதி முடித்திருந்தார்.இவர், நேற்று முன்தினம், பல்சர் பைக்கில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.எறையானுார் சர்வீஸ் ரோடு சந்திப்பில் சென்றபோது, முன்னால் சென்ற ஸ்விப்ட் டிசைர் கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்தியுள்ளார்.இதனால், பின்னால் சென்ற அப்துல் ஆசிப் பைக்கும், மகன், மகளுடன் ரியாஸ் மனைவி ஆயிஷா பர்வீன், 31; என்பவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரும் கார் பின்னால் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், அப்துல் ஆசிப், ஸ்கூட்டரில் சென்ற ஆயிஷா பர்வீன், மகன் முகமது லியாஸ், 14; மகள் ஜாஸ்மின்சுல்தான், 11; ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த அப்துல் ஆசிப் உட்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில், அப்துல் ஆசிப் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நள்ளிரவில் இறந்தார்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.