மேலும் செய்திகள்
புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள்
06-Dec-2024
விழுப்புரம்: மழை வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டிற்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு தலா ஒரு கிலோ வழங்கப்பட்டு வருவதாக கூடுதல் தலைமைச் செயலர் தெரிவித்தார்.மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள், விழுப்புரம் பெருந்திட்ட வளாக விளையாட்டரங்கில் இருந்து பிரித்து அனுப்பும் பணியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணியை ஆய்வு செய்து கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு 12 சமுதாய நலக்கூடங்களில் இருந்து 24 மணி நேரமும் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளம் வடிந்த பகுதிகளில் உணவு சமைத்து வழங்க 105 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளைக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கடந்த 2 நாளில் 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட மற்றும் பிறதுறைகள் மூலம் அனுப்பிவைத்துள்ள நிவாரணப் பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடு மற்றும் அரசு கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு ரேஷன்கார்டிற்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.அப்போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் பொன்னையா, மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி உடனிருந்தனர்.
06-Dec-2024