உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு

பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன்குப்பம் மாரியம்மன் கோவில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் வெளியே வைக்கப்பட்டுள்ளது. இதில் பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக கிராம தலைவர் மணி என்பவர், தொல்லியல் ஆய்வாளர் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது தலைமையில் அதன் அமைப்பினர் அந்த பகுதியில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருந்த மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் இருப்பதைக் கண்டு, அதனை ஆய்வு செய்தனர். 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள மூத்த தேவியின் தலை கரண்ட மகுடத்துடன் காதில் மகர குண்டலம் அணிந்து, கழுத்து ஆபரணங்களுடன், தோல் வளைவிகளும் கைகள், கால்களில் அழகிய அணிகலன்களுடன் காணப்பட்டது. மேலும், மார்புக்கு கீழே சன்ன வீரம் அணிந்து, வலது கையில் தாமரை மொட்டும், இடது கை திண்டின் மீது வைத்த படியும், இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையில் இந்த தவ்வை சிற்பம் காட்சியளிக்கிறது. வலது புறம் மகன் மாந்தனும், அவரது கையில் சிதைந்த நிலையில் துடைப்பமும், இடது புறம் மகள் மாந்தியும், அவரது கையில் காக்கை கொடியை ஏந்தியவாறு இருவரும் சுகாசன கோலத்தில் அமர்ந்தவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் இறுதி பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கால சிற்பக்கலை பாணியில் உள்ளது. சிற்பத்தின் அமைப்பை காணும் போது, இதன் காலம் கி.பி.89ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். மேலும், 1,200 ஆண்டுகள் பழமையான தமிழ் இனத்தின் தாய் தெய்வ வழிபாட்டில் மூத்த தேவி எனப்படும் இந்த தவ்வை பொதுவாகவேளாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக வழிபட்டதாக சங்க இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டு இருப்பதாக மணியன் கலியமூர்த்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ