ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திண்டிவனம் : பாலம் கட்டுவதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சி, 3 வது வார்டு, ஆலன் தெருவில் சிறுபாலம் கட்டுவதற்காக எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி சிறு பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றது. அந்த பாலத்தையொட்டி நகராட்சி சார்பில், புதியதாக சிமெண்ட் சாலை போடுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறுபாலத்தையொட்டி ஆக்கிரமிப்புகள் இருந்ததால், அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டும், அவை அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி பொறியாளர் சரோஜா, நகரமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் ரோஷணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் ஆகியோர் பொக்லைனுடன் அகற்றுவதற்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே அகற்றிவிடுவதாக கூறியதை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.