உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் போலீசார் மீது தாக்குதல்: போலீஸ் நிலையம் சென்றும் மிரட்டல்; ரவுடி கும்பல் அட்டூழியம்; 5 பேர் கைது

திண்டிவனத்தில் போலீசார் மீது தாக்குதல்: போலீஸ் நிலையம் சென்றும் மிரட்டல்; ரவுடி கும்பல் அட்டூழியம்; 5 பேர் கைது

திண்டிவனம்; திண்டிவனத்தில் போலீசாரை தாக்கியதுடன், போலீஸ் நிலையத்திற்குள் சென்று மிரட்டிய ரவுடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், கிடங்கல் (2) காலனியை சேர்ந்த ஆகாஷ், 25; ராஜேஷ், 26; சின்னராசு, 20; ஆகியோர் கஞ்சா போதையில், பஸ் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த திண்டிவனம் டவுன் போலீஸ் ஏட்டுக்கள் முருகையன், நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, தகராறு செய்தவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.அப்போது, போதை கும்பலை சேர்ந்த ஆகாஷ், ஏட்டு முருகையனை தாக்கி, கீழே தள்ளிவிட்டார். இதைத்தொடர்ந்து டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது, ஆகாஷ்அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த ராஜேஷ், சின்னராசுவை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதை கேள்விபட்ட பிரபல ரவுடி சேட்டு (எ) பிரதீப்குமார், 27; டவுன் போலீஸ் நிலையத்திற்கு இரவு 9:00 மணியளவில் கையில் எடுத்து சென்ற பீர்பாட்டிலை போதையில் அவரது தலையில் அடித்துக்கொண்டு, எப்படி ராஜேஷ் என்பவரை கைது செய்யலாம் என்று கூறி போலீஸ் நிலையத்தில் இருந்த மேஜையை அடித்து உடைத்தார். இந்த சம்பவத்தை மொபைல் போனில் படம் எடுத்த பெண் போலீஸ் மீனாட்சியை தாக்கி, அவர் வைத்திருந்த மொபைல் போனை பிடுங்கி உடைத்துவிட்டார். இந்த சம்பவத்தின்போது, பிரதீப்குமாரின் கூட்டாளிகள் கிடங்கல்(2) பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், ராஜேஷ் மனைவி மனோகரி, 20 ; ஆகியோரும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தகராறு செய்து, பணியில் இருந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் ராஜேஷ், மனோகரி ஆகிய இருவரும் பிளேடால் தங்கள் உடம்பில் கிழித்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் மனோகரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கஞ்சா, போதையில் இருந்த ரவுடி கும்பல் அட்டகாசம் செய்ததால், ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரேணஸ்வரி மற்றும் போலீசார் வந்து, போலீஸ் நிலையத்திற்கு புகுந்து கலாட்ட செய்த, ராஜேஷ்(சரித்திர பதிவு குற்றவாளி), பிரதீப்(சரித்திர பதிவு குற்றவாளி), சின்ராசு, பாலச்சந்திரன் மற்றும் ராஜேஷ் மனைவி மனோகரி ஆகிய, 5 பேரை கைது செய்தனர். திண்டிவனம் டவுன் போலீசார் கைது செய்யப்பட்ட, 5 பேர் மீதும், கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ஆகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் திண்டிவனம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி கும்பலால் போலீசார் திணறல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை