உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு விருது

நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு விருது

விழுப்புரம்: மாவட்டத்தில் நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு: தமிழக அரசு வேளாண்-உழவர் நலத்துறை, மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் நவீன வேளாண் கருவிகள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும் 3 நபர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பங்குபெற விரும்புவோர் தங்களது பெயரை உழவர் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணம் ரூ.150. பங்கேற்பாளர்கள் தனது சாதனை குறித்து மாவட்ட அளவிலான குழுவிடம் செயல் விளக்கங்கள், இயந்திரங்கள், புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றுடன் விளக்க வேண்டும். விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்த கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். இதற்கு முன் இத்தகைய கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றிருக்க கூடாது. விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் இயந்திரம், வேறு ஒரு தனி நபருடைய அல்லது ஒரு கண்டுபிடிப்பின், தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ, மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக் கூடாது. இதற்கான சான்று வேளாண் பொறியியல் துறை மூலம் பெறப்பட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் நவீன தொழில் நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கருவி விவசாயிகளின் சாகுபடி செலவினத்தை குறைக்க கூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை தரக்கூடியதாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும். அறிமுகப்படுத்தப்படும் இயந்திரம் அடிக்கடி பழுதுபடாததாகவும், பழுது ஏற்படும்பட்சத்தில் உள்ளூரிலேயே பழுதுநீக்கும் வகையில் இருக்க வேண்டும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண் இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. விவசாயிகள், இத்திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ