உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற பா.ஜ., வினர் கைது

ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற பா.ஜ., வினர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ., வினரை போலீசார் கைது செய்தனர். பீகாரில் காங்., சார்பில், ராகுல் தலைமையில் நடந்த வாக்காளர் உரிமை பேரணியில், பிரதமர் மோடியின் தாயாரை, எதிர்க்கட்சியினர் அவதுாறாக பேசியதை கண்டித்து, தமிழகம் முழுதும் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதையொட்டி, விழுப்புரத்தில் நேற்று பா.ஜ., மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து நகராட்சி திடலில், காலை 10:30 மணிக்கு பா.ஜ.,வினர் திரண்டனர். மாவட்ட தலைவர் தர்மராஜா, நகர தலைவர் விஜயன், மகளிரணி ராஜலட்சுமி, ஞானாம்பிகை உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள், ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கண்டித்து கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தை துவக்க முயன்றனர். இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீசார், பா.ஜ.,வினரிடம், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.,வினர், 'இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். அப்போது சரி என கூறிவிட்டு, இப்போது ஆர்ப்பாட்டம் நடத்த தடை என கூறுவதா' என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ., மகளிரணியினர் உள்ளிட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி