முகாம்:விவசாயிகளுக்கு தேசிய அடையாள எண் வழங்க... ஆதார் கார்டு போல் வழங்க பிரத்யேக ஏற்பாடு
வானுார்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று, தேசிய அளவில் விவசாய அடையாள எண் பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் சகோதரத் துறையில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட கிராம அளவிலான சமுதாய பயிற்றுநர்களையும் ஒருங்கிணைத்து பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரித்து, மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளின் தரவுகள் சேகரித்து அடையாள எண் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப் படும். இதன் மூலம் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும். கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர் கடன் பெற இயலும்.விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகள் மற்றும் மானியங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் பிரதமரின் கவுரவ நிதி வழங்கும் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்ட பலன்களை வழங்கும் 24 துறைகளை ஒன்றிணைத்து இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம் இன்று 3ம் தேதி முதல் வரும் 9ம் தேதிவரை மாவட்டத்தில் உள்ள 928 வருவாய் கிராமங்களிலும், அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் நில உடமை மற்றும் தங்களது சுய விபரங்களை சேகரிக்கும் முகாம்கள் நடைபெறும் நாட்களில் நில ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து பயன்பெறலாம்.இதற்கான 'ஆப்' நேற்றுவரை வரவில்லை. இன்று வந்தால், திட்டமிட்டபடி பதிவு முகாம்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.