தற்கொலைக்கு துாண்டிய 4 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
செஞ்சி : தற்கொலைக்கு துாண்டிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.செஞ்சி, கிருஷ்ணாபுரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் அக்பர் மகன் சையத் ரஹிமான் 45. இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், தனக்கு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் தெரியும் எனக் கூறி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கியிருந்தார். இவருக்கு உதவியாக செஞ்சி எம்.ஜி.ஆர்,, நகரைச் சேர்ந்த பாட்ஷா 50. இருந்துள்ளார்.இதே போல் திண்டிவனத்தை சேர்ந்த தம்பிராஜ், 36; கோபிநாத், 32; ஆகியோரிடமும் சையத் ரஹிமான் பணம் வாங்கியிருந்தார். கடந்த 27 ம் தேதி பாட்ஷாவும், பென்னகரை சேர்ந்த உத்தரகுமார், 56; என்பவரும் சையத் ரஹிமானை திண்டிவனத்தில் உள்ள தம்பிராஜ், கோபிநாத் ஆகியோரிடம் அழைத்து சென்றனர்.அங்கிருந்து, தம்பிராஜா, கோபிநாத் ஆகியோர், சையத் ரஹிமான் மனைவி கம்ருன் நிஷா 35, வுக்கு போன் செய்து சையத் ரஹிமான் 33 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர்.அன்று இரவு மீண்டும் சையத் ரஹிமானை செஞ்சியில் கொண்டு வந்து விட்டு விட்டனர். மறுநாள் பகல் 12 மணி அளவில் சையத் ரஹிமான் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.இது குறித்து கம்ருன் நிஷா கொடுத்த புகாரின் பேரில் சையத் ரஹிமானை தற்கொலைக்கு துாண்டியதாக தம்பி ராஜா, கோபிநாத், உத்தரகுமார், பாஷா ஆகியோர் மீது செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து பாஷாவை கைது செய்தனர்.