செயின் பறிப்பு: ஆசாமி கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மஞ்சுளா, 54; இவர், கடந்த 18ம் தேதி வடக்கு ரயில்வே காலனி வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், மஞ்சுளா அணிந்திருந்த 6 சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பினர். மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் பாணாம்பட்டு ரயில்வே கேட் பகுதியில், விழுப்புரம் டவுன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அதில் அவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு காளி கோவில் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் பிரதாப், 27; என்பதும், மஞ்சுளாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து, பிரதாப்பை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கையும், 10 கிராம் நகையையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் பறித்த செயினை வங்கியில் அடகு வைத்துள்ளதால், அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.