ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டப்படி நடவடிக்கை விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
விழுப்புரம்: ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி, வாய்க்கால்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், வேளாண் துணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரேமலதா உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:கழுவெளி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரி, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஏழுசெம்பொன் கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தாலும், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் அலைகழிக்கின்றனர்.திண்டிவனம் தாலுகா, ஒலக்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ மூட்டைக்கு 50 கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். இதுகுறித்து புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படல்லை.மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வானுார் தாலுகாவில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகை, அவர்கள் வாங்கிய கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடூர் அணையையொட்டியுள்ள சங்கராபரணி ஆற்றில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், 'கழுவெளிப் பகுதியில் ரூ.8 கோடியில் உயர்மட்டப்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, வனத்துறையின் அனுமதிக்காக உள்ளது. பணம் பெறுவதாக புகார் கூறப்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புகார் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி, வாய்க்கால்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு புகார் வந்தால், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.