உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செய்தித்தாள்களை படிப்பதன் மூலம் பொது அறிவு வளரும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுரை

செய்தித்தாள்களை படிப்பதன் மூலம் பொது அறிவு வளரும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுரை

விழுப்புரம்: மாணவர்கள் பல்துறை அறிவை வளர்த்துக்கொள்ள செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும்' என, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்வில் பங்கேற்கும்போது, எனது பள்ளி பருவ காலம் நினைவுக்கு வருகிறது. படிக்கும்போது, பிற பள்ளிகளில் நடக்கும் வினாடி வினா போட்டிகளில் கலந்துகொள்வோம். அப்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்காக, 'தினமலர்' போன்ற நாளிதழ்களில் வரும் மாதிரி வினா விடை பகுதிகள், வினாடி, வினா போட்டிகள் போன்றவற்றை படித்து பங்கேற்போம். இப்போது, 'தினமலர் - பட்டம்' இதழ் போன்று, அறிவை வளர்க்கும் எளிமையான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்துள்ளது. ஆரம்ப காலங்களில், ஒரு திரைப்படம் 3 மணி நேரம் ஓடியது, பிறகு இரண்டரை மணி நேரமானது, தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. 20 நிமிடங்களுக்குள் மிக சுருக்கமாக கருத்தை பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படித்தான் தொழில் நுட்ப வசதியும், இன்றைய அதிவேக காலகட்டத்திற்கு ஏற்ப நாம் ஓட வேண்டியுள்ளது. அந்த வேகத்திற்கு நம்மால் ரோபோ போல் கற்க முடியாது. ஆனால், தொடர் வாசிப்பு பழக்கத்தால் எளிதில் கற்க முடியும். இதுபோன்ற வினாடி வினா நிகழ்வுகள், போட்டித் தேர்வுகளில் சாதிக்க உதவும். தினசரி செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் பொது அறிவு வளரும். நாங்கள் படித்த காலங்களில், சென்னையில் இருந்த மூர் மார்க்கெட்டில் பழைய புத்தகங்கள், செய்திதாள் தொகுப்புகளை வாங்கி வந்து படிக்க வேண்டியிருந்தது. இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இருப்பதால், அனைத்து தகவல்களையும் பெற முடிகிறது. தொழில்நுட்ப வாய்ப்புகளை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். பெற்றோர்கள், தங்களை விட தம் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என படிக்க வைக்கின்றனர். அவர்களின் கனவை நினைவாக்க, இது போன்ற பொது அறிவு தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி சாதிக்க வேண்டும். மாணவர்கள் உயர்வுக்கு சிறந்த நிகழ்வை நடத்தி வரும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை