உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் திருட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் திடீர் முற்றுகை

மணல் திருட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் திடீர் முற்றுகை

விழுப்புரம்: ஏரியில் அனுமதியின்றி மண் எடுத்து, விதி மீறி விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி, கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் அருகே வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாயில் பகுதியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பெலாக்குப்பம் ஊராட்சி வேம்பூண்டி கிராமத்தில், பொதுப்பணித்துறை ஏரியில், விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்ற சிலர், விவ சாய நிலத்திற்கு மண் அடிப்பதாக கூறி, தனி நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அரசு அனுமதித்த அளவை விட, 10 முதல் 12 அடி ஆழம் வரை தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர். இதுபோல், பல இடங்களில் அவர்கள் அதிகம் பள்ளம் எடுத்துள்ளதால், மேய்ச்சலுக்கு வந்த 30க் கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளன. இந்த ஏரியில் தொடர்ந்து மண் திருட்டு நடந்து வருகிறது. இந்த ஏரியில் தற்போது சிப்காட் பகுதிக்கு மண் அடிப்பதாக கூறி பலர் திருட்டுத்தனமாக மண் எடுத்துச் செல்கின்றனர். நேற்று முன்தினம் ஏரியில் மண் எடுக்க வந்த 3 லாரிகள், ஒரு ஜெ.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை மக்கள் தடுத்து நிறுத்தி வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தோம். அப்போது, தாசில்தார் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால், நேற்றுவரை எந்த அதிகாரியும் வரவில்லை. திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கையில்லை. இதே போல், கடந்தாண்டும் ஏரியில் அனுமதியின்றி மண் எடுத்து பலர் விற்பனை செய்தனர். தொடர்ந்து ஏரியில் மண் திருட்டு நடப்பதால், பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு விபத்தும், ஏரியின் கட்டமைப்பும் வீணாகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அவர்களை சமாதானப் படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பினர். இதனையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை