துாக்கில் கல்லுாரி மாணவர் உடல் விழுப்புரம் அருகே பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவரது மகன் துரைராஜ், 20; விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.காம்., 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை கோலியனூர் கூட்ரோடு அடுத்த தோப்பு காலனி சுடுகாடு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில், கயிறால் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. மேலும், அவரது பெற்றோர் வந்து பார்த்து, தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மோப்ப நாய் ராக்கி உதவியுடன் போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார், சந்தேக மரணம் வழக்கு பதிந்து, துரைராஜ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.