ஊடக உலகில் முக்கிய பங்களிப்பு ரவிக்குமார் எம்.பி., வாழ்த்து
விழுப்புரம்: முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தினமலர், தமிழக மக்களின் அரசியல் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக, ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த, 1951ம் ஆண்டில் துவங்கப்பட்ட தினமலர், உடனுக்குடனான செய்திகள், ஆழமான பகுப்பாய்வுகள், அரசியல் விமர்சனங்கள் முதலானவற்றை வாசகர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்யும் தினமலர், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முன்னணி பங்கு வகிக்கிறது. இதன் எளிய மொழியும், கூர்மையான அரசியல் நையாண்டியும் கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற வாசகர்கள் வரை அனைவரையும் ஈர்க்கின்றன. இதன் ஆன்லைன் பதிப்பும், மொபைல் செயலியும் இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளன. தமிழ்நாட்டின் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தினமலர் இப்போது பவளவிழா காண்கிறது. ஊடக உலகில் இது மென்மேலும் வளர்ந்து நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.