விக்கிரவாண்டி, மயிலம் தொகுதிக்கு காங்., குறி
விழுப்புரம்: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் வி.சி., - காங்., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணி கட்சிகள் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியை காங்., கட்சி கேட்டது. ஆனால், தி.மு.க., கடந்த 3 தேர்தல்களிலும் இத்தொகுதியை தன்வசம் வைத்துக்கொண்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி அல்லது மயிலம் தொகுதியை தங்களுக்கு அளிக்க காங்., கட்சி கேட்டுள்ளது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பிரசாரம் செய்து வெற்றிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதனால் காங்., கட்சிக்கு, விக்கிரவாண்டி அல்லது மயிலம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என தி.மு.க., தலைமையிடம் காங்., வலியுறுத்தி உள்ளது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி அல்லது மயிலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்பதில் காங்., தீவிரமாக உள்ளனர். இதில் எந்த தொகுதி கொடுத்தாலும் களம்காண உள்ளூர் காங்., கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.