மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் நோட்டீஸ்
திண்டிவனம் : திண்டிவனம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டருக்கு, விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரோஷணை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக அவதுாறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.புகார் மீது போலீசார் வழக்குப் பதியவில்லை. அதனால் கடந்த ஆண்டு மே 15ம் தேதி திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சண்முகம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சண்முகம் புகார் மீது நடவடிக்கை எடுத்து, கோர்ட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், ரோஷணை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.அதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் கடந்த ஜூலை 11ம் தேதி திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி, ரவீந்திரன்துரைசாமி, கவுதமன் மீதான புகாரில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக கொடுத்தார். அதனை மாஜிஸ்திரேட் கமலா பதிவு செய்தார்.இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரோஷணை போலீசார் விசாரணை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாஜிஸ்திரேட் கமலா உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் ஜான்பாஷா ஆஜரானார்.ஆனால், ரோஷணை போலீசார் சார்பில் விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. ரோஷணை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரிக்கு, மாஜிஸ்திரேட் கமலா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.