மேலும் செய்திகள்
லோன் தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை
01-Oct-2024
விழுப்புரம்,: ஆன்லைனில் கடன் தருவதாக கூறி விவசாயியை ஏமாற்றி ரூ.4.92 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முன்னூரைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் ராமச்சந்திரன், 32; விவசாயி. இவர், தனது செல்போனில் கடந்த செப்.9 தேதி பேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, குறைந்த வட்டியில், தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக விளம்பரம் வந்துள்ளது. அதனை பார்த்து, அந்த லிங்கிற்குள் சென்று, அதில் கேட்ட தகவல்களையும் பதிவு செய்துள்ளார்.பிறகு, செப்.16ம் தேதி, ஒரு மர்ம நபர் தொடர்புகொண்டு, அந்த நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், நீங்கள் கேட்ட கடனை உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு, டாக்குமெண்ட் செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமச்சந்திரன், அந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில், பல தவணை களாக ரூ.4.92 லட்சம் தொகையை செலுத்தியுள்ளார். இதன் பிறகு, கடனை தராமல், அந்த மர்ம நபர் ஏமாற்றியது தெரியவந்தது.இது குறித்து, ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Oct-2024