நலிவடைந்த கலைஞர்களுக்கான நிதியுதவி ரூ.6 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்
விழுப்புரம்: ''தமிழகத்தில் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கான அரசு நிதியுதவியை, ரூ.6 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்'' என்று நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் அங்காள பரமேஸ்வரி பம்பை உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான கலை விழா பேரணி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்தியராஜ் சிறப்புரையாற்றினார். நாட்டுப்புற கலைஞர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து, நாட்டுப்புற கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள் வேடமிட்டு, நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர்.சங்க மாநில தலைவர் சத்தியராஜ் கூறியதாவது:நலிவடைந்த கலைஞர்கள் நிதியுதவி திட்டத்தில், தற்போது ஆண்டிற்கு 500 பேர் வீதம் தலா ரூ.3,000 நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிதியை ஆண்டுக்கு 1,000 பேருக்கு என அதிகரித்து, ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.கலைஞர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் மாவட்ட கலை விருதை 25 பேருக்கு என உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.