உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

திண்டிவனத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

திண்டிவனம்; திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நடந்தது. திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் ஆரம்பத்தில் அதிக பரப்பளவை கொண்டு, அப்பகுதி மக்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்தது. இந்த குளத்தை சுற்றி கடந்த 50 ஆண்டுளுக்கு மேலாக ஒன்றன் பின் ஒன்றாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டிவிட்டனர். இதனால் குளம் சுருங்கி போய்விட்டது. ஆக்கிரமிப்பு பகுதிகளி லிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் புகுந்ததால், குளம் மாசுபட்டு விட்டது. ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு, நகராட்சி வரி, சிலருக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் விசாரணைக்கு பிறகு கடந்த, 2024ம் ஆண்டு, செப்.,15ம் தேதி குளத்தை சுற்றியுள்ள 66 வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை அகற்ற உத்தரவிட்டது. கலெக்டர் தலைமையில் நகராட்சி ஆணையர், தாசில்தார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு போடப்பட்டது. இந்த குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஐகோர்ட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவின் பேரில், கடந்த ஜூலை 29 ம் தேதி நகராட்சி, வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை கடந்த, ஆக.,4 ம் தேதிக்குள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி பிரச்னை செய்தனர். இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆக., 25 ம் தேதி நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து வீடு வீடாக நோட்டீஸ் ஓட்டினர். அதில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யவில்லை எனில், நகராட்சி சார்பில் அகற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், தாசில்தார் யுவராஜ், நகராட்சி ஆணையாளர் சரவணன், நகரமைப்பு அலுவலர் திலகவதி ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் ஜே.சி.பி.,மூலம் அகற்றும் பணி துவங்கியது. மொத்தமுள்ள 66 ஆக்கிரமிப்பு வீடுகளில், 10 கடைகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டு விட்டதால், மீதமுள்ள 56 ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அனைத்தும் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தினகரன், டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் துணையுடன் அகற்றும் பணி நடந்தது. தீர்தக்குளம் பகுதி, மெயின்ரோட்டில் உள்ளதால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பகுதிகளை, பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கிய போது, அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர்.

மாற்று இடம் எப்போது?

பாதிக்கப்பட்டவர்களுக்கு டி.பாஞ்சாலம் இடத்தில் மாற்று இடம் வழங்குவற்கு வருவாய்த்துறை உறுதி கூறியது. ஆனால் அதற்கான உத்தரவு முறைப்படி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. ஒரே சமயத்தில் வீடுகளை இழந்தவர்கள் பலர் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்வர்கள். உடனே வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டதால், பலர் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் அருகிலுள்ள பகுதியில் வாடகை வீட்டில் குடியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்குவதற்கான உத்தரவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !