உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்த பக்தர்கள்

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் செய்தனர்.இரவு, 11:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூஜாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். கலெக்டர் பழனி, எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாமதம்

அமாவாசை பூஜையின் போது நடைபெறும் திருட்டை தடுக்க, நேற்று முன்தினம் கோவில் முதல் சுற்று பிரகாரத்தில் உற்சவர் அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பக்தர்களை உடனுக்குடன் அங்கிருந்து அனுப்பினர். இதனால் பக்தர்களுக்கு குங்குமம், சாமி கயிறு வழங்க முடியாததால், பூஜாரிகள் அம்மனை உஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு செல்ல மாட்டோம் என்றனர். உதவி ஆணையர் ஜீவானந்தம் இரு தரப்பிலும் பேச்சு நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து வழக்கமாக, 11:00 மணிக்கு ஊஞ்சல் மண்டத்திற்கு கொண்டு வரும் அம்மனை, அரை மணி நேரம் தாமதமாக, 11:30 மணிக்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி