உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்காச்சோளத்திற்கும் நேரடி கொள்முதல் நிலையம்... வேண்டும்; ரூ.3,500 விலை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

மக்காச்சோளத்திற்கும் நேரடி கொள்முதல் நிலையம்... வேண்டும்; ரூ.3,500 விலை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுவதால், மக்காச் சோளத்திற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறந்து, ரூ.3,500 விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயத்தையும், அதனை சார்ந்த தொழிலையும் நம்பியே ஏராளமான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் நெல், கரும்பு, வேர்கடலை, மரவள்ளி மற்றும் சவுக்கு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக பூக்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.இதே போல், மாற்று பயிராக மக்காச் சோளத்தை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நல்ல விளைச்சல் இருந்தும், மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.விழுப்புரம் முன்னோடி விவசாயிகள் கலிவரதன், முருகையன் உள்ளிட்டோர் கூறுகையில்;மாவட்டத்தில் விழுப்புரம், கண்டமங்கலம், திருவெண்ணைநல்லுார், விக்கிரவாண்டி, திண்டிவனம் வட்டாரங்களில் இந்த மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காசோளம் பயிரிட்டு வருகின்றனர். மழை காலம் தவிர்த்து பிற காலங்களில் இதனை பயிரிடலாம், 90 நாளில் வளர்ந்து, 120 நாள்களுக்குள் பயிர் அறுவடை செய்யப்படும். ஏக்கருக்கு 30 மூட்டை அளவில் விளைச்சல் கிடைக்கிறது. சோளமாக மக்களுக்கு பயன்தருவது மட்டுமின்றி, மாட்டு தீவினம், கோழி தீவனங்களுக்கும் அதிகளவல் பயன்படுத்தப்படுகிறது. அரசு உரிய சோளத்திற்கு விலை கிடைக்க செய்ய வேண்டும் என்றனர்.தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் கூறுகையில்; மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) அதிகபட்சமாக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.2,350 அளவிற்கு மார்க்கெட் கமிட்டிகளில் விலை போகிறது. வெளி வியாபாரிகளும் அதே அளவில் தான் எடுக்கின்றனர். விவசாயிகளுக்கு செலவினம் போக லாபம் போதுமானதாக கிடைப்பதில்லை.இதனால், அரசு சார்பில் நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்து எடுப்பது போல், மாநில அரசு மக்காச்சோளத்திற்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, நேரடி கொள் முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிர்ணயிக்க வேண்டும், அத்துடன் ஊக்க தொகை வழங்க வேண்டும்.தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை பெற்று தர வேண்டும். மக்காச்சோளம் பயிரிட்டு வரும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, போதிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை