விளையாட்டு போட்டியில் மாற்றுத் திறனாளிகள் அசத்தல்: மாவட்ட அளவில் ஆர்வமுடன் பங்கேற்பு
விழுப்புரம் விழுப்புரத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று விளையாடி அசத்தினர்.உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஒட்டமும், நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு 200 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதலும், 17 வயதிற்கு மேற்பட்டோருக்கு 400 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டப்பந்தயம் நடந்தது.இதே போல், 12 முதல் 14 வயது வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தது.மேலும், 15 முதல் 17 வயது வரை முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண், பெண்களுக்கு குண்டு எறிதலும், குறைவாக பார்வைத்திறன் பாதித்தவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 16 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டத்தட்டு எறிதலும், குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 200 மீட்டர் ஓட்டமும் நடந்தது.முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வட்ட தட்டு எறிதலும், குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 15 வயதிற்கு மேற்பட்ட (சிறப்பு பள்ளிகள்) முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு குண்டு எறிதலும் நடந்தது.மேலும், கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள், சங்க உறுப்பினர்களான பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடந்தது. கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதித்தவர்களுக்கான போட்டிகள் (உதவி உபகரணங்களுடன்) 12 வயது முதல் 14 வயது வரை உள்ள ஆண், பெண்களுக்கு காலிப்பர் மற்றும் கால்தாங்கி உதவியுடன் 50 மீ நடைப்போட்டி நடந்தது.அதே போன்று, 15 வயது முதல் 17 வயது வரை ஆண்களுக்கு மூன்று சக்கர உதவியுடன் 150 மீட்டர் ஓட்டமும், பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி உதவியுடன் 75 மீட்டர் ஓட்ட போட்டியும் நடந்தது.அறிவுசார் குறையுடையோருக்கான 12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு ஓடி நீளம் தாண்டுதலும், 17 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தது.இப்போட்டிகளில், சிறப்பு பள்ளிகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.