உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் வெறிச்சோடியது!அரசு மற்றும் தனியார் பஸ்கள் தொடர்ந்து புறக்கணித்து வரும் அவலம்

திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் வெறிச்சோடியது!அரசு மற்றும் தனியார் பஸ்கள் தொடர்ந்து புறக்கணித்து வரும் அவலம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் ரூ.27.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதை நிறுத்திக்கொண்டதால், பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கின்றது. பஸ்கள் வரத்து குறைந்துள்ளதால் நகராட்சி கடைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றது.நகர பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கைக்கு கடந்த தி.மு.க.,ஆட்சியின் தீர்வு காணப்பட்டது. திண்டிவனம்-சென்னை சாலையில் ரூ.27.51 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய நகராட்சி பஸ் நிலையம் கடந்த பிப்.,4 ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் 67 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை போட்டி போட்டிக்கொண்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் ரூ.3 லட்சம் வரை வைப்பு தொகை கட்டியும், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு எடுத்தனர்.பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வரும், கடை வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவில் வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில், கடை உரிமையாளர்கள் இருந்தனர்.இந்நிலையில், பஸ் நிலையம் திறக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையில், பஸ் நிலையத்தில் மொத்தமுள்ள 67 கடைகளில் 7 கடைகள் மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள கடைகள் அனைத்தும் மூடியே கிடக்கின்றது.இதனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை திறக்காமாலேயே நகராட்சிக்கு வாடகை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நகர்மன்ற கூட்டத்தில் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வராமல் இருப்பதால், கடைகள் திறக்க முடியவில்லை. பஸ் வரத்து அதிகமான பிறகு கடை வாடகை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி, திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, நகராட்சி பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதன் பிறகு கலெக்டர் தலைமையில் நகராட்சி கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டும், பஸ்கள் வரத்து எண்ணிக்கை உயரவில்லை.இதற்கு காரணம், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம், வேலுார்,பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், திண்டிவனம் மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, பஸ் நிலையம் வராமல் செல்கின்றது.இதேபோல் திருச்சி கும்பகோணம், மதுரை, கோயம்புத்துார், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பஸ் நிலையம் வராமல் செல்கின்றது. திண்டிவனம் மேம்பால பஸ் நிலையம்தான் பிரதான பஸ் நிலையமாக இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.இதற்கிடையில் பஸ் நிலையத்தில் நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்தவர்கள், பஸ் நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஏலம் எடுத்த கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். Galleryஇந்த பிரச்னையில் மாவட்ட கலெக்டர் தலைமையிட்டு, நகராட்சி பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்வதற்கு உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ