விழுப்புரத்தில் பாதாள சாக்கடை, சாலை பணிகளால் அதிருப்தி: ஆட்சிக்கு அவப்பெயர் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
விழுப்புரம் நகர மன்ற கூட்டம், சேர்மன் தமிழ்செல்வி பிரபு தலைமையில் நடந்தது. துணை சேர்மன் சித்திக்அலி, கமிஷ்னர் வசந்தி, உதவி பொறியாளர் ராபர்ட், நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது: கோல்டு சேகர் (அ.தி.மு.க.): மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், நகராட்சியின் முதல் வார்டிலேயே பாதாள சாக்கடை பணிகள் முடிக்கவில்லை. 30 தெருக்களில் குடிநீர் வசதி இல்லை. பன்றி தொல்லையால் ஒருவர் இறந்துள்ளார். பன்றிகளை பிடிக்க வேண்டும், பன்றி வளர்ப்பை தடை செய்ய வேண்டும். புருஷோத்தமன் (தி.மு.க.): சாலாமேடு பகுதிக்கு திருப்பாச்சனூர் பகுதி குடிநீர் திட்டம் அறிவித்த முதல்வருக்கு நன்றி. சாந்தராஜ் (தி.மு.க.): புதிய குடிநீர் திட்டத்தில் 41வது வார்டு பெரியார் நகரையும் இணைக்க வேண்டும். ரியாஸ் (காங்.,): இன்னும் 2 ஆண்டுகள் தான் உள்ளது. வார்டுகளில் மக்கள் பிரச்னை தீர்க்க வேண்டும். வரி வசூலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பாதாள சாக்கடை பணி, சாலை வசதி இன்றி மக்கள் அவதிப்படுவாதல் அடுத்தமுறை வரி கேட்க முடியாது. நாய்கள் அதிகளவில் திரிவதால், பலர் விபத்தில் சிக்குகின்றனர்.ராதிகா (அ.தி.மு.க.,): விழுப்புரம் நகராட்சிக்கு, கடந்த அ.தி.மு.க., காலத்தில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்டப் பணிகள் நடந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், எவ்வித வளர்ச்சி திட்டமும் நடக்கவில்லை. பல நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டும், விழுப்புரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தாதற்கு, உள்கட்சி அரசியல் காரணம். 9வது வார்டு மெயின்ரோடில் மக்களுக்கு இடையூராக மீன், காய்கறி கடைகள் அதிகளவில் இயங்குவதை முறைபடுத்த வேண்டும். கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.மணவாளன் (தி.மு.க.,): தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் முயற்சியில், நகரில் புதிய டவுன் ஹால் வந்துள்ளது. புதிய பஸ் நிலையத்தில் ரூ12 கோடி, மஞ்சு நகரில் ரூ.2.95 கோடியில் வடிகால் வாய்க்கால் பணி, புதிய மீன் மார்க்கெட் போன்ற பல திட்ட பணிகள் நடக்கிறது. அங்கன்வாடி, பகுதிநேர ரேஷன் கடைகள் கட்டி திறக்காமல், நகராட்சி நிர்வாகத்தால் கிடப்பில் உள்ளது. மாதாந்திரம் நகர மன்ற கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்னையை விவாதிக்க வேண்டும். 4 மாதத்திற்கு ஒருமுறை கூட்டினால், வேலை நடக்காது. அத்தியா வசிய திட்டங்களுக்கு கூட பொது நிதி ஒதுக்கி பணிகளை செய்வதில்லை. நகராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.அன்சர்அலி (தி.மு.க.,): 4 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்துவதால், என்ன திட்டப்பணிகள் நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. பொது நிதியில் அத்தியா வசிய பணிகளை செய்வதில்லை. ஜனனி தங்கம் (தி.மு.க.,): சாலாமேடில் குடிநீர் பிரச்னை தொடர்கிறது. அதிகாரிகள் எங்கு வேலை செய்கிறார்கள் என தெரிவில்லை என்றார். அதைத் தொடர்ந்து, ஆளும் தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில், விழுப்புரம் முழுதும் பாதாள சாக்கடை பணிகள் பாதி முடிக்காமல் கிடக்கிறது.பணிகள் முடிந்த பல இடத்தில் சாலை அமைக்கவில்லை. நகராட்சிக்கு, இன்ஜினியர் இல்லாததால் பணிகள் முடங்கி கிடக்கிறது. எந்த வளர்ச்சிபணிகளும் நடக்கவில்லை. ஆளுக்கு தகுந்தபடி, சாலை பணிகள் முடிக்கும் நிலை உள்ளது. பெண் கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால், ஒப்பந்ததாரர் அநாகரீகமாக பேசுகிறார். அதிகாரிகள் மெத்தனத்தால் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் என குற்றம்சாட்டினர்.