மும்முனையில் சிக்கியுள்ள மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்டத்தில், முன்பு பொன்முடி, மஸ்தான் என இரண்டு அமைச்சர்கள் இருந்தனர். முன்பெல்லாம், தெற்கு மாவட்டத்திலுள்ள விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.,நிர்வாகிகள் புத்தாண்டு தினத்தில் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அதே போல் வடக்கு மாவட்டத்திலுள்ள திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய மூன்று தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் மஸ்தானை (தற்போது இல்லை) சந்தித்து வாழ்த்து பெறுவார்கள்.சமீபத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது, மஸ்தான் பதவி பறிக்கப்பட்டது. அதே போல் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, டாக்டர் சேகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மஸ்தானுக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி மட்டும் ஒரே அமைச்சராக உள்ளார். தற்போது நடந்த புத்தாண்டு தினத்தின் போது, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.,நிர்வாகிகள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் அமைச்சர் மஸ்தான் என மூன்று பேரையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடியை மட்டும் சந்தித்தால் சிக்கல் ஏற்படும் என்பதால், மஸ்தான், சேகர் ஆகிய இருவரையும் சந்தித்து கோஷ்டி அரசியலில் சிக்காமல் தப்பித்து கொண்டனர்.