மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
விழுப்புரம், : வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார். இதில், கனமழை எச்சரிக்கையை யொட்டி, மாவட்டத்தில் கடலோர பகுதிகளான மரக்காணம், வானுார் வட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அனைத்து துறை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூறப்பட்டது.காவல்துறை, தீயணைப்பு சார்பில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வருவாய் துறை சார்பில் வி.ஏ.ஓ., அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், ஏரிகள், ஆறுகளில் நீர் இருப்பு குறித்த தகவல், நீர் வெளியேறும் அளவை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், காலி சாக்குபைகளை இருப்பு வைக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், போதிய மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மக்களுக்கு தேவையான அடிப்டை வசதிகள், அத்தியாவசிய உணவு பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் தெரிவித்தார்.எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.