உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் தொகுதியில் தி.மு.க., போட்டி? ஆளுங்கட்சி தரப்பில் தீவிர ஆலோசனை

வானுார் தொகுதியில் தி.மு.க., போட்டி? ஆளுங்கட்சி தரப்பில் தீவிர ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில், வானுார் சட்டசபை தொகுதியை, தொடர்ந்து அ.தி.மு.க., கைப்பற்றி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணி, 2021 சட்டசபை தேர்தலைவிட கூடுதலாக ஓட்டுகள் பெற்றுள்ளது. இப்பகுதி உள்ளாட்சி பதவிகளும், ஆளுங்கட்சியின் வசம் உள்ளது. ஆளுங்கட்சி கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையில், நீண்ட காலத்திற்கு பின், வானுார் தொகுதியை கைப்பற்ற தி.மு.க., திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய வானுார் தொகுதியில் வரும் தேர்தலில் தி.மு.க., சார்பில் வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் பல தேர்தல்களாக போட்டியிட காத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் மாவட்ட துணைச் சேர்மன் மைதிலி ராஜேந்திரன் ஆகியோரிடையே சீட் பெறுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், சில முக்கிய நிர்வாகிகளும் சீட்டுக்காக காத்திருக்கின்றனர். இருந்தாலும் பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன் ஆகியோரை கட்சித் தலைமை ஏமாற்ற தயாராக இல்லை. இதில், தெற்கு மாவட்ட செயலாளரான விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணனுக்கு பக்க பலமாக புஷ்பராஜ் விளங்குகிறார். மாவட்டத்தில் மற்ற முக்கிய நிர்வாகிகள் தயக்கம் காட்டிய நிலையில், கட்சித் தலைமை உத்தரவுக்கு கட்டுப்பட்டு சற்றும் தயங்காமல், புதிய மாவட்ட செயலாளருடன் இணைந்து புஷ்பராஜ், கட்சி பணி மேற்கொண்டு வருகிறார். இதனால், வானுார் தொகுதியில் போட்டியிட புஷ்பராஜிக்கு வாய்ப்பும், மைதிலி ராஜேந்திரனுக்கு வேறு முக்கிய பொறுப்பும் வழங்கப்படலாம் என தி.மு.க., தரப்பு முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி