உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு தேடி தி.மு.க.,வினர் ஏமாற்ற வருகின்றனர்: பழனிசாமி கடும் விமர்சனம்

வீடு தேடி தி.மு.க.,வினர் ஏமாற்ற வருகின்றனர்: பழனிசாமி கடும் விமர்சனம்

விழுப்புரம்:தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது வீடு தேடி நோட்டீஸ் கொடுத்து தி.மு.க., வினர் ஏமாற்ற வருவதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.விழுப்புரத்தில் நேற்று மாலை நடந்த, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரச்சார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில் நான்கரை ஆண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களுக்கு துன்பங்கள் தான் அதிகம். 'பெஞ்சல்' புயலின்போது, விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மிதந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் தானே, புரவி, வர்தா என பல புயல்கள் தொடர்ந்தாலும், அதே புயல் வேகத்தில் நிவாரணப்பணிகள் நடந்தன.தி.மு.க., ஆட்சியில் நள்ளிரவில் சாத்தனுார் அணையை திறந்துவிட்டு, 2 லட்சம் கன அடி தென்பெண்ணையில் வெள்ளம் வந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். விவசாயத்துக்கு இலவச மும்முனை மின்சாரம், பயிர் காப்பீடு திட்டங்கள் முழுமையாக வழங்கப்பட்டது.விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா பல்கலை., கொண்டு வந்தோம். ஆனால், தி.மு.க., அரசு அதனை ரத்து செய்தது. அதனால் தான் பொன்முடியின் அமைச்சர் பதவியை ஆண்டவனே பறித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நாங்கள் அடிக்கல் நாட்டினோம். தி.மு.க. அரசு ரத்துசெய்துள்ளது. நந்தன் கால்வாயை ரூ.27 கோடியில் புனரமைத்தோம். ரூ.310 கோடிக்கு திட்டம் தயாரித்தோம். அதையும் கிடப்பில் போட்டனர். எந்த திட்டத்திற்கும் நிதியில்லை என்கின்றனர்.நீட் தேர்வில் கடந்த, 2017-18ல், 9 அரசு பள்ளி மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். இதனால், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து, ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கினோம். மத்திய அரசின் உயர்கல்விக்கான இலக்கை தமிழகம் அடைந்தது.உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை தி.மு.க., ஆட்சியின் போது 100க்கு 32 பேர் தான். அதிமுக ஆட்சி வந்த பிறகு தான், பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியதால் எண்ணிக்கை உயர்ந்தது. விழுப்புரத்தில் உள்ள உயர்கல்வி படிப்பு மையத்தை மூடுகின்றனர். வரும்,14ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 150 அரசு கல்லுாரிகளில், 90 கல்லுாரிகளில், முதல்வர்கள் இல்லை, பேராசிரியர்களும் இல்லை.மின் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துவிட்டது. வீட்டு வரி, சொத்து வரி, 52 சதவீம் உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்டுள்ளனர்.சாப்பாட்டு அரிசி விலை, ரூ.37 லிருந்து ரூ.77 ஆக உயர்ந்துள்ளது.புழுங்கல் அரிசி 42 லிருந்து 72 ஆக உயர்ந்துள்ளது. கடலை எண்ணை ரூ.130லிருந்து ரூ.180 ஆகவும், நல்லெண்ணை ரூ.230லிருந்து ரூ,420 ஆகவும் உயர்ந்துள்ளது.எம்சாண்டு ரூ.3000 லிருந்து ரூ.5500 ஆகவும், ஜல்லி 6.2000 லிருந்து ரூ.4500 ஆகவும், கம்பி ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.70 ஆயிரத்திற்கும், செங்கல் ரூ.7 லிருந்து ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது.சிமெண்ட் ரூ.240 லிருந்து ரூ.350 ஆகவும் உயர்ந்துள்ளது. மலிவு விலையில் நாங்கள் அம்மா சிமெண்ட் வழங்கினோம். கட்டுமான பொருள் விலை உயர்வால் கனவில் தான் இனி வீடு கட்ட முடியும்.அ.தி.மு.க ஆட்சியில், சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர். இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லையில் ஓய்வு பெற்ற அதிகாரி ஜாகீர்உசேன், தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக பல முறை புகார் தெரிவித்தும், வலைதளத்தில் பதிவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் கொல்லப்பட்டார்.முஸ்லிம்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்புக்கு அரிசி, நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன கட்டைகள், கடந்த 2019 முதல் தமிழக அரசே ஹஜ் பயணத்திற்கு நிதி, பிறகு நிதியை உயர்த்தியும் வழங்கப்பட்டது. உலமாக்கலுக்கு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டது. பள்ளி வாசல்கள் புனரமைக்கப்பட்டது. இப்படி பல திட்டங்களை வழங்கினோம்.தி.மு.க., அரசு நான்கரை ஆண்டு முடிந்த உடன், தற்போது புதிதாக வீடு தேடி குறை கேட்க வருகின்றனர். எதிர்கட்சியாக இருந்தபோது, குறைகள் கேட்டு பெட்டி வைத்த வாங்கிய மனுவை என்ன செய்தனர். இவ்வளவு நாள் என்ன செய்தனர். இப்போது வீடு தேடி நோட்டீஸ் கொடுக்க வருகின்றனர். மொபைல் எண்ணை கொடுத்தால் ஆளில்லாத நேரத்தில் வந்து கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள். மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. மதுரையில் வீட்டு வரி வசூலிப்பில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. 8 பேர் கைதாகியுள்ளனர். தி.மு.க., மண்டல தலைவர்கள் தான் காரணம் என்பதால், அவர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதன் மீது விசாரணை நடத்தப்படும். இப்போது ஸ்டாலினின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. அ.தி.மு.க., வந்ததும் மக்களாட்சி நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ