நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசலால் தொகுதியை கோட்டை விடும் தி.மு.க.,: கூட்டணி கட்சிக்கு தாரை வார்க்க தலைமை முடிவு?
திண்டிவனத்தில், நிலவும் ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் காரணமாக, தொகுதி கூட்டணிக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகர மன்ற தலைவர் பதவியை, நீண்ட காலத்திற்கு பின் தி.மு.க., கைப்பற்றியுள்ளது. இந்நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 24 வார்டுகளை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தானின் ஆதரவாளரான கவுன்சிலர் நிர்மலா நகர மன்ற தலைவராகவும், வி.சி., கட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி, துணைத் தலைவராகிவும் தேர்வு செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் நடந்த நகர மன்ற கூட்டத்தின்போது, தி.மு.க கூட்டணிக்குள் புகைச்சல் வெடித்தது. 'நான் பட்டியல் சமூகம் என்பதால், எனக்கு நகர மன்ற தலைவர் அருகே இருக்கை ஒதுக்கவில்லை' என ஆதங்கத்தை துணைத் தலைவர் வெளிப்படுத்தினார். அதற்கு 'அப்படி ஒதுக்கினால், 10 கவுன்சிலர்கள் வெளியேறி விடுவோம்' என நகர மன்ற தலைவரின் கணவர் கூறியதாக நகர மன்ற கூட்டத்திலேயே வெளிப்படையாகவே துணைத் தலைவர் ராஜலட்சுமி திடுக்கிடும் புகாரை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தி.மு.க , கவுன்சிலர்கள் சிலர், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, நகரமன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்' கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். கட்சித் தலைமை இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தது. ஆனாலும், திண்டிவனம் நகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களிடையே கோஷ்டி பூசல் நீறுபூத்த நெருப்பாக நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, திண்டிவனம் தொகுதியை, தங்கள் கூட்டணியில் உள்ள வி.சி.,கட்சிக்கு ஒதுக்க தி.மு.க., தலைமை ஆலோசிப்பதாக மூத்த நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.