போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழுப்புரத்தில் உறுதிமொழியேற்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அரசு சட்டக்கல்லுாரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலையில், 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' பெருந்திரள் உறுதிமொழியை கல்லுாரி மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் ஏற்றனர். போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதை பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், போதை பொருட்களை தமிழகத்திலிருந்து வேரறுக்க அரசுக்கு துணை நின்று அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உறுதிமொழியேற்றனர். மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லுாரிகளில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், கலால் உதவி ஆணையர் ராஜி, ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.