பட்டாவை மாற்றித்தர கோரி மூத்த தம்பதி தர்ணா
திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் மூத்த தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரா, 75; இவரது மனைவி சந்திரா, 70; இவருக்கு திண்டிவனம் அடுத்த ஆத்திப்பாக்கத்தில் பூர்வீக வீட்டு மனை உள்ளது. இந்த வீட்டு மனை வேறு ஒரு பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளது.இதனையறிந்த வயதான தம்பதி இருவரும் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலக வாயில் முன் அமர்ந்து பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்றித் தர கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.சம்பவத்தின் போது, சப் கலெக்டர் இல்லாததால் அலுவலக ஊழியர்கள் தம்பதியிடம் மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து சென்றனர்.