தர்பூசணி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
வானுார்: வானுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தர்பூசணி விலை வீழ்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். வானுார், காட்ராம்பாக்கம், ரங்கநாதபுரம், சேமங்கலம், உப்புவேலுார், கொமடிப்பட்டு, வி.பரங்கனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 200 ஏக்கர் அளவிற்கு தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டது.கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி, தற்போது அறுவடை பணி துவங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்தாண்டு குறைந்த விளைச்சல், காய் பெருக்கம் இருந்ததால், நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு அதிக இடங்களில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். 2 மாத பயிரான தர்பூசணி கடந்தாண்டு குறைந்த அளவில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டதால், நல்ல விலை கிடைத்தது.இந்தாண்டு பல இடங்களில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட பின் இடையில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்ததால், தர்பூசணி பழங்கள் பெருக்கவில்லை.இதையே ஒரு காரணமாக வியாபாரிகள் கூறி விலையை குறைத்து விடுகின்றனர். இந்தாண்டு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை தான் விற்கப்படுகிறது. தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே சரியாகி விடுகிறது. இதில் எந்த லாபமும் கிடைக்கவில்லை' என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.