கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் முறை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்; கூட்டுறவு சங்கங்களில் சிபில் ஸ்கோர் பார்த்து, பயிர் கடன் வழங்கும் விதியை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து விவசாய சங்கத்தினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு;தமிழக கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் கடந்த மாதம் அனுப்பிய சுற்றறிக்கையில், கூட்டுறவு வங்கியில், விவசாயிகள் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன் பெறுவதற்கு, சிபில் ரிப்போர்ட் பார்த்து கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் தான், பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பயிர் கடன் 2 மடங்கு குறைவாகவே நிர்ணயம் செய்கின்றனர். குறிப்பாக, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.76 ஆயிரம் செலவாகிறது, ஆனால், தமிழக அரசு ரூ.36 ஆயிரம் பயிர் கடன் தருகிறது. இதனால், கூடுதல் செலவை சமாளிப்பதற்காக விவசாயிகள் பிற வங்கிகளிலும், உரம் வாங்க கடன் பெறுகின்றனர். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும், கல்வி கடன், நகை கடனுக்கும், தேசிய வங்கியில் கடன் வாங்கி, அதனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல், விவசாயிகள் சிபில் ரிப்போர்ட்டில் சிக்கியுள்ளதால், கூட்டுறவு வங்கி மட்டுமே நம்பி உள்ளனர். கூட்டுறவு வங்களில் சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரான, புதிய சுற்றறிக்கையை ரத்த செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.