கரும்பு கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
கண்டமங்கலம் : ஆழியூர் கிராமத்தில் தீ விபத்தில் எரிந்த கரும்பு லோடு ஏற்றப்பட்ட 4 டிரெய்லர்களுக்கு இழப்பீடு வழங்காத சர்க்கரை ஆலையை கண்டித்து கோட்ட கரும்பு அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் கரும்புகளை ஏற்றிய 4 டிரெய்லர்கள் தீ பிடித்து எரிந்தன.இந்த டிரெய்லர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆலை நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 5 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் இ.ஐ.டி., பாரி ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டமங்கலத்தில் உள்ள ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை கரும்பு கோட்ட அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம், மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க பொருளாளர் நாகராஜன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.