விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம்: விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரபிரபு நிருபர்களிடம் கூறுகையில், 'தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். வேர்க்கடலை, தேங்காய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு முழுதும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மாவட்ட அவைத் தலைவர் உலகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.