100 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம்: மாவட்டத்தில் நெல் விலை குறைப்பை தடுக்க, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் தலைமையில், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர். அப்போது, அவர்கள் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து, திடீர் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், மிக குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கின்றனர். சன்ன ரக நெல் ரூ.24.50க்கும், குண்டு நெல் ரூ.24க்கும் எடுக்க வேண்டும் என அரசு பரிந்துரை செய்து அறிவித்துள்ளது. ஆனால், வியாபாரிகள் கிலோ ரூ.17க்கு எடுக்கின்றனர். அதிகம் வரத்தால் விலை வீழ்ச்சி என ஏமாற்றுகின்றனர். மார்க்கெட் கமிட்டிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.இதனால், உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையத்தையும் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு பதிலாக, 50 கிலோ மூட்டையாக வாங்க வேண்டும். இந்தாண்டு, நமது மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர். தர்னாவில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அவர்கள், கலெக்டரிடம் மனு அளித்து முறையிட்டனர்.