உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீராணம் குடிநீர் குழாயில் உடைப்பு; தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு

வீராணம் குடிநீர் குழாயில் உடைப்பு; தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சென்னைக்கு செல்லும் வீராணம் குடிநீர் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 25 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், வீராணம் ஏரியில் இருந்து, 250 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலையோரம் குழாய் அமைத்து, கடந்த, 2004ம் ஆண்டு முதல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதற்காக, நெய்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பம்ப்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு, தினமும், 65 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கோலியனுார் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில், வீராணத்தில் இருந்து தண்ணீர் செல்லும் ராட்சத குழாயில், நேற்று மாலை, 4:00 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. அதிகம் அழுத்தம் காரணமாக, குழாயிலிருந்து, 25 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வெளியேறி, அருவியாக கொட்டியது. இதுகுறித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வாயிலாக, வீராணம் குடிநீர் திட்டப்பணி மேற்கொள்ளும் சென்னை மெட்ரோ குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 6:00 மணியளவில், நெய்வேலி பம்பிங் ஸ்டேஷனில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.அதை தொடர்ந்து, திண்டிவனம், நெய்வேலியிலிருந்து வந்த மெட்ரோ குடிநீர் திட்ட குழுவினர், வால்வை சீரமைக்கும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, தண்ணீர் வெளியேறியதால், பல லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேறி, அங்கிருந்த சவுக்கு, நெல் பயிர்களில், வெள்ள நீர் போல் தேங்கியது. தண்ணீர் வெளியேறிய பகுதி அருகே மின்சார கம்பிகள் சென்றதால், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் திரண்டதால், வளவனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீராணம் குடிநீர் குழாய் திட்டத்தில், திடீர் அழுத்தம் காரணமாக, பஞ்சமாதேவி பகுதியில் இருந்த வால்வு பழுதாகி, தண்ணீர் வெளியேறியதாகவும், குடிநீர் நிறுத்தப்பட்டு, அதற்கான சீரமைப்பு பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !