உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்: பயிர்கள் சேதம்

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்: பயிர்கள் சேதம்

செஞ்சி : செஞ்சி பகுதியில் பெய்த கன மழையினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மேல் களவாய் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது. செஞ்சி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலையிலும், இரவு நேரத்திலும் கன மழை பொழிந்து வருகின்றது. கடந்த, 12 மற்றும் 13ம் தேதி இரவு செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கன மழை பெய்தது. தொடர்ந்து, நேற்றும் வராக நதி நீர் பிடிப்பு பகுதிகளான பாக்கம் மலைக்காடுகள், கெங்கவரம், கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை, சோ.குப்பம் காட்டு பகுதியில் கனமழை பெய்தது. இதனால், சோ.குப்பம், பாக்கம், சத்தியமங்கலம் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செவலபுரை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. வராகநதி வெள்ளம் சங்கராபரணி ஆற்றில் கலந்ததால், அங்கு நேற்று வெள்ள பெருக்கு ஏற்பட்டது. செஞ்சி அருகே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை வெள்ளத்தில் மூழ்கியது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சங்கராபரணி தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மாணவர்களும், பொது மக்களும் 3 கி.மீ., தூரம் சுற்று வழியாக சென்றனர். பயிர்கள் சேதம் செஞ்சி ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. விவசாய நிலங்கள் வழியாக மழை வெள்ளம் செல்வதால் சோ.குப்பம், பாக்கம் கிராமங்களில் நெல் நடவு செய்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ