உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கோவில் பொது இடத்தில் இலவச வீட்டுமனை : கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

 கோவில் பொது இடத்தில் இலவச வீட்டுமனை : கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

விழுப்புரம்: செஞ்சி அருகே கோவில் இடத்தில் இலவச வீட்டுமனை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செஞ்சி அருகே சின்னகரம் கிராம மக்கள், நேற்று மாலை 4:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, ரேஷன் கார்டை ஒப்படைப்பதாக கூறி, திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் பல தலைமுறைகாளாக நாங்கள் திருவிழா நடத்தி வழிபட்டு வருகிறோம். கோவில் சுற்றியுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருவிழா வழிபாடுகள், பாராம்பரிய போட்டிகள், பொது நிகழ்வுகளை ஊர் மக்கள் சார்பில் நடத்தி வருகிறோம். அந்த கோவில் இடத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், ஆன்மிக வழிபாட்டுக்கும், பொது நிகழ்வுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர். எங்கள் கிராமத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், எவ்வித கருத்துகேட்காமல், இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை கிராமத்தினர் எதிர்ப்பதோடு, ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு, கிராமத்தில் உள்ள பிற பொது இடத்தை ஆய்வு செய்து, அங்கு பட்டா வழங்க வேண்டும். இல்லை எனில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து, தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர். விழுப்புரம் தாலுகா போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பினர். அவர்கள், அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ