பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
விழுப்புரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நுாற்றாண்டு விழா மற்றும் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சடகோபன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசபெருமாள், சக்திவேல், பொன்னுசாமி, ராமமூர்த்தி, விருதகிரி, கவிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முகமதுகாஜா வரவேற்றார்.மாநில தலைவர் அமிர்தகுமார் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் கார்மேகவண்ணன், புருஷோத்தமன், தட்சிணாமூர்த்தி, வீரப்பன், முருகபாண்டியன், அமைப்பு செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைசெயலாளர் சங்கர் நன்றி கூறினார்.கூட்ட தீர்மானங்கள்: அரசு அலுவலர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். 7வது ஊதிய குழுவின் வழங்கப்படாத 21 மாத நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமன உரிமையை பழையபடி முழுமையாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். கல்வித்துறையில் 10 ஆண்டிற்கு மேலாக பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் முறையான ஊதியத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.