மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
விழுப்புரம்: திருப்பூரில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற விழுப்புரம் அரசு பள்ளி மாணவியை பாராட்டினர்.தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் திருப்பூரில் உள்ள, மாவட்ட உள் விளையாட்டரங்கில் கடந்த டிச.27ம் தேதி சப் ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான ஜூடோ போட்டி நடந்தது. இப்போட்டியில் 52 கிலோ முதல் 57 கிலோ வரையிலான எடை பிரிவில் பல மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தினி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.இதனையடுத்து அவர், பூனாவில் இந்திய ஜூடோ பெடரேஷன் சார்பில் வரும் ஜன.18 முதல் 21ம் தேதி வரை நடக்கின்ற போட்டியில் கலந்துகொள்ள உள்ளார்.இந்த மாணவி கீர்த்தினி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வருகிறார். சாதனை படைத்துள்ள மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, விழுப்புரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழீவாசன், சோழா ஜூடோ அகாடமி பயிற்சியாளர் சென்செய் குணசேகரன் ஆகியோர் பாராட்டினர்.