விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விழுப்புரம்; விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால், திண்டுக்கல் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி செய்யப்பட்டது.திண்டுக்கல் ஆரோக்கியமேரி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 47; இவர், கடந்த 2017ம் ஆண்டு, விழுப்புரம் நகராட்சி சூப்பர்வைசராக பணியாற்றிய போது, கடந்த 2017ம் ஆண்டு மே 5ம் தேதி காலை, மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சில் பயணித்தார்.அப்போது அந்த பஸ் திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளானதில், ஆரோக்கியராஜ் படுகாயமடைந்தார்.இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆரோக்கியராஜ், நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதி மன்றம், பாதிக்கப்பட்டவருக்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 435 ரூபாய் இழப்பீடாக, திண்டுக்கல் கிளை மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.அதன்படி இழப்பீடு வழங் காததால், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஆரோக்கியராஜ் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாகவும், வட்டி தொகை சேர்த்து 2.93 லட்சம் ரூபாய் வழங்கவும், அதனை நிறைவேற்றாவிட்டால், அரசு பஸ்சை ஜப்தி செய்யவும், கடந்த 5ம் தேதி உத்தரவிட்டார்.இதனையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுனர் வேணுகோபால், ஆரோக்கியராஜ், அவரது வழக்கறிஞர்கள் பிரபாகரன், இளங்கோவன் முன்னிலையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்த, மதுரை (சென்னை - திண்டுக்கல்) அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை ஜப்தி செய்தனர்.