உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து பைனான்சியர் கடத்தல்: சினிமா பாணியில் போலீஸ் சேசிங்.. விழுப்புரம் அருகே பரபரப்பு

வீடு புகுந்து பைனான்சியர் கடத்தல்: சினிமா பாணியில் போலீஸ் சேசிங்.. விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைனான்சியரை காரில் கடத்திய மர்ம கும்பலை பிடிக்க போலீசார், சினிமா பாணியில் சேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வளத்தியை சேர்ந்தவர் ராஜி மகன் சிவா, 40; பைனான்சியர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர். நேற்று காலை 8:00 மணியளவில், இவரது வீட்டிற்கு சைலோ காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்திகளுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு, சிவாவை காரில் கடத்திச் சென்றது. வீட்டிலிருந்தவர்களின் மொபைல் போன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்த சிவாவின் பார்சுனர் காரில் சிவாவை ஏற்றிக் கொண்டும், அவர்கள் வந்த சைலோ காரில் மீதியுள்ளவர்கள் ஏறியும் மின்னல் வேகத்தில் பறந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, முக்கிய சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடத்தல் கும்பல் வளத்தியிலிருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சி நோக்கிச் சென்றது. நெடுஞ்சாலையில் போலீசார் கண்காணிப்பை உணர்ந்த கடத்தல் கும்பல், காலை 9:00 மணிக்கு விழுப்புரம் முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பில் இருந்து விழுப்புரம் நகருக்குள் அதிவேகமாக வந்தனர். அப்போது, விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே போலீசாரை பார்த்த கும்பல், மீண்டும் வந்த வழியாக திரும்பி எதிர்புற சாலையில் விதிகளை மீறி மின்னல் வேகத்தில் சென்றனர். அப்போது, 4 இடங்களில் சாலையில் வந்த இரு சக்கர வாகனங்கள் மீது இடித்து விட்டு மர்ம கும்பல் தப்பியது. விழுப்புரம் முழுதும் போலீசார் அலர்ட்டாக இருந்ததையறிந்த கும்பல், விழுப்புரம் பைபாஸ், ஜானகிபுரம் அருகே பார்ச்சுனர் காரையும், சிவாவையும் விட்டு விட்டு, சைலோ காரில் தப்பிச்சென்றது. விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார் காரையும், சிவாவையும் மீட்டனர். விழுப்புரம் டி.எஸ்.பி., கந்தசாமி, செஞ்சி, வளத்தி இன்ஸ்பெக்டர்கள் வனஜா, அண்ணாதுரை தலைமையில், தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து சென்றனர். ஆனால், அவர்கள், மடப்பட்டு பகுதியில் திரும்பி தலைமறைவாகினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பைனான்சியரான சிவா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் திருமணம் செய்துகொண்டு அங்கு தங்கியவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளாக வளத்தியில் குடியேறி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தனது தொழிலுக்காக, மதுரையில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருந்ததாகவும், அப்படி, கடன் கொடுத்தவர்கள், வளத்திக்கு அடியாட்களை அனுப்பி, சிவாவை கடத்தி வந்து பணத்தை பெற முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து, வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து, கடத்தப்பட்ட சிவாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த கடத்தல் கும்பலை போலீசார் விரட்டிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ