தேசிய கால்நடை இயக்ககத்தின் மூலம் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு
செஞ்சி : தேசிய கால்நடை இயக்ககத்தின் மூலம் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஆரணி தொகுதி எம்.பி., தரணிவேந்தன் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.கேள்வி நேரத்தின் போது அவர் பேசுகையில், 'தேசிய கால்நடை இயக்ககம் மூலம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை. திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கால்நடைகளின் ஆரோக்கியம். உற்பத்தித்திறன் மற்றும் இனப் பெருக்கத்தை மேம்படுத்தவும், கால்நடை மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தவும், திட்டத்தை விரிவுபடுத்தவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன' என கேள்வி எழுப்பினார்.அதற்கு, பதில் அளித்து மத்திய கால்நடைத் துறை அமைச்சர் சிங் பாகல், பதில் அளித்து பேசுகையில், 'தேசிய கால்நடை இயக்ககம் 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டில், இத்திட்டம் அமைச்சரவை ஒப்புதலுடன் மறு சீரமைக்கப் பட்டது.தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 93.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இதுவரை 8 லட்சத்து 68 ஆயிரத்து 744 விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.திட்டத்தை விரிவுபடுத்த கருத்தரங்குகள், காணொலி மாநாடுகள், மாநிலங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பிராந்திய ஆய்வு கூட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன' என்றார்.