கள்ளச்சாராய வியாபாரி மணல் கடத்தலில் கைது
செஞ்சி: மணல் கடத்தலில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜா உள்ளிட்ட நாலு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.செஞ்சி அடுத்து மணியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சம்பவ இடத்தை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு திண்டிவனத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜா 40, அவரது ஆட்களுடன் பொக்லைனை பயன்படுத்தி டிராக்டர் டிப்பர் மற்றும் டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மரூர் ராஜா, அவருடன் இருந்த ஆலகிராமம் ஆறுமுகம்,38; பட்டணம் கிராமம் மணிகண்டன்,32; திண்டிவனம் விக்னேஷ்,19; ஆகியோரை கைது செய்தனர். .சம்பவ இடத்தில் இருந்த மரூர் ராஜாவின் போர்டு கார், இரண்டு டிராக்டர், டிப்பர் மற்றும் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.கடந்தாண்டு மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்தின் போது மரூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி, வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.