திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் விபத்துகள் அதிகரிப்பு : 4 வழிச்சாலை அவசியம்
செஞ்சி : புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் முக்கிய பகுதியாக உள்ள திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை எண்.77 புதுச்சேரியில் துவங்கி திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ணகிரியில் முடிகிறது. 178 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை எண்.48ல் இணைந்து பெங்களூரு செல்கிறது. வரலாற்று காலம் தொட்டு முக்கிய சாலையாக இருந்து வரும் இந்த சாலையை 2011ம் ஆண்டு மத்திய அரசு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த அறிவிப்பு வெளியிட்டது.அறிவிப்பிற்கு பின் நடந்த கணக்கெடுப்பில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரிந்ததால் திட்டத்தில் மாற்றம் செய்து 624.24 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலை அமைக்க டெண்டர் விட்டனர். திட்டம் துவங்கி 12 ஆண்டுகளுக்கு பிறகு 7 மீட்டர் சாலையை 10 மீட்டர் அகலத்திற்கு இரு வழிச் சாலையாக அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு முடிந்தது. மூன்று இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கின்றனர். திட்டம் துவங்கிய 2012ம் ஆண்டில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, பணிகள் முடிவதற்கு முன்பாகவே 10 மடங்கு அதிகரித்துள்ளது. திட்டம் முடிந்து சாலையின் தரம் உயர்ந்த பிறகு புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கும், மும்பைக்கும் புதிதாக நுாற்றுக்கணக்கான ஆம்னி பஸ்களை இயக்கி வருகின்றனர்.பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் முக்கிய ரிலாக்ஸ் சென்டராக புதுச்சேரி மாறி உள்ளது. இவர்கள் ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட கார், இரு சக்கர வாகனங்களில் புதுச்சேரியில் குவிகின்றனர். புதுச்சேரியில் பொருட்களுக்கான உற்பத்தி வரி குறைவாக இருப்பதால் இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து சோப்பு உள்ளிட்ட முக்கிய நுகர்வு பொருட்கள் வட மாநிலங்களுக்கு பெங்களூரு வழியாக லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.தற்போது திண்டிவனத்தில் துவங்கி கிருஷ்ணகிரி வரை உள்ள அனைத்து நகரங்களிலும் கார், வேன், பைக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி - பெங்களூரு இடையிலான வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.இதில் திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வரையிலான சாலை மிக முக்கிய சாலையாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திற்கு மட்டும் அதிக பக்தர்கள் சென்று வந்தனர்.தற்போது விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள திருவண்ணாமலைக்கு கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த 5 ஆண்டில் தெலுங்கு பேசும் மக்களிடம் திருவண்ணாமலை கோவில் மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பின் காரணமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஒட்டு மொத்தமாக திருவண்ணாமலைக்கு விழா நாட்களில் குவியும் பக்தர்களில் 50 சதவீதம் பக்தர்கள் வந்து செல்லும் பிரதான சாலையாக திண்டிவனம் - திருவண்ணாமலை சாலை மாறியுள்ளது. இந்த வழியில் அதிகமான வாகனங்கள் செல்வதால் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்படும் போது விபத்து நடந்து பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில் நுாற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளே இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிக விரைவாக செயல்பட்டு திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான சாலையை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.