விஜயநகர மன்னர் கால கல்வெட்டுகள் சோமசமுத்திரத்தில் கண்டெடுப்பு
செஞ்சி:செஞ்சி அருகே விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த 658 ஆண்டுகள் பழமையான கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் பழமையான சோமநாதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக கருங்கல் கட்டுமானங்களை பிரித்தபோது, கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்த, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:கோவில் திருப்பணிக்காக பிரித்து வைத்துள்ள கருங்கற்களில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதில் 5 கல்வெட்டுகளை ஆய்வு செய்யப்பட்டது. முற்று பெறாத 2 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சக ஆண்டு 1289 என்பது, ஆங்கில ஆண்டு 1367ஐ குறிக்கும். இந்த ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலமாகும். இக்காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பணர் இருந்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதி பல்குன்றக் கோட்டம், சிங்கபுர நாட்டிற்குட்பட்டு இருந்துள்ளது. இந்த கல்வெட்டில் கிராமத்தில் கிடைத்த வரி வருவாய் மூலம் கோவில் திருப்பணிகள் செய்திருப்பதை பதிவு செய்துள்ளனர் என்பதையும், கல்வெட்டு 658 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதையும் அறிய முடிகிறது. இங்கு மேலும் கல்வெட்டுகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.