உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பில் 1,200 போலீசார் தீவிரம்: மாவட்டத்தில் 1,862 சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பில் 1,200 போலீசார் தீவிரம்: மாவட்டத்தில் 1,862 சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,862 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், 1,200 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த காலங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். சமீப காலமாக கிராமங்கள்தோறும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது அதிகரித்து விட்டது. இந்த பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலையை நிறுவுவோர், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்புத் துறை, மின்சாரம் உள்ளிட்ட துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். சிலை துாய களிமண்ணால் செய்திருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு தற்காலிக கொட்டகைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலையின் பாதுகாப்பிற்காக 2 பேரை 24 மணிநேரமும் பணியில் அமர்த்த வேண்டும். பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்ற மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய சப் டிவிஷன்களில் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தி சிலை அமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்நிலையில், மாவட்டம் முழுதும் 1,862 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலைகள் மூன்றாம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் எடுத்துச் சென்று கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விநாயகர் சிலைகள் மற்றும் ஊர்வலத்தில் எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், ஒரு சிலைகள் கூட விடுபடாமல் கணக்கெடுக்கவும் போலீசாருக்கு காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோன்று, விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் எந்த நீர்நிலையில் கரைப்பது எனவும் போலீசார் 'ரூட்' தயார் செய்து கொடுத்துள்ளனர். மாவட்டத்தில் எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்னையுமின்றி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அலைமோதிய கூட்டம் திணறிய கடை வீதி விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்களான அவுல், பொரி கடலை, பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் பூக்கள் வாங்க விழுப்புரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று விழுப்புரத்திற்கு வந்திருந்தனர். இதனால் கடை வீதிகளில் காலை முதல் மாலை வரை கூட்டம் அலை மோதியது. விநாயகருக்கு தேவையான குடைகள், பிளாஸ்டிக் பூக்களால் தயார் செய்த மாலைகள், சிறிய அளவிலான விநாயகர் சிலை, பூ மற்றும் காய்கறிகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை